புதுக்கோட்டையில் படுகொலைசெய்யப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்திற்கு 1 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் நவல்பட்டு பகுதியில் சனிக்கிழமை இரவுகளில் திருடப்படும் ஆடுகள் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு சந்தைகளில் விற்கப்பட்டு வருவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.. இதனால் போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் நவல்பட்டு காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பூமிநாதன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஆடு திருடும் கும்பலை தனியாக இருசக்கர வாகனத்தில் விரட்டி சென்றுள்ளார்.
அப்போது அவரை 2 பேர் கொண்ட கும்பல் கீரனுர் அருகே கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணையை நடத்தி வருகின்றனர்.
இந்த கொலை தொடர்பாக விசாரிக்க 2 டிஎஸ்பிக்கள் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், மேலும் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.. இது தொடர்பாக ஆடு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 6 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்..
இந்நிலையில் புதுக்கோட்டையில் படுகொலைசெய்யப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்திற்கு 1 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்… மேலும் உயிரிழந்த பூமிநாதன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் என்று மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.. ரோந்து பணியில் இருந்த பூமிநாதன் கொல்லப்பட்ட சம்பவத்தை அறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.