அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து காபி பவுடா், பதப்படுத்தப்பட்ட மூலிகைகள் என்ற பெயரில் உலர் கஞ்சா பவுடா், உலர் கஞ்சா இலைகள் ஆன்லைன் மூலமாக பார்சல்களில் சென்னைக்கு வந்தன. அடிக்கடி இவ்வாறு வெளி நாடுகளிலிருந்து வரும் பார்சல்களை தபால் துறை, புலனாய்வுத் துறையினர் சோதித்துள்ளனர். காற்று புகாத வகையில் மிக நேர்த்தியாக இவை பேக் செய்து அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த மூன்று மாதங்களாக இவ்வகையில் வரும் பார்சல்கள் என 4 கிலோ எடையுள்ள 31 பார்சல்களை தபால் துறை, புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து சோதித்துள்ளனர். மேலடுக்கில் காபி பவுடர் இருந்த பார்சலை மொத்தமாகப் பிரித்துப் பார்த்தபோது உள்ளே கஞ்சா செடியின் காய்ந்த இலைகள் (உலர் கஞ்சா) இருந்தது தெரிய வந்துள்ளது. அதை பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பி சோதித்தபோது அது கஞ்சா எனத் தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும். போலி முகவரி மூலம் வெளிநாட்டிலிருந்து பார்சல் அனுப்பப்பட்டு சென்னையில் அதை வாங்கி, சாமர்த்தியமாகப் பயன்படுத்தி வந்துள்ளார் பரமகுரு (28) என்பவர்.
வெளிநாட்டிலிருந்து 130 கிராம் உலர் கஞ்சா பார்சலில் வந்ததை வாங்கச் செல்லும் போது பரமகுரு சிக்கினார். அதன் மதிப்பு ரூ.45,000 எனக் கூறப்படுகிறது. பரமகுரு கடந்த 3 மாதங்களாக வெளிநாடுகளிலிருந்து தொடர்ந்து 4 கிலோ வரை கஞ்சா வரவழைத்துள்ளதை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனா். கஞ்சா கடத்திய குற்றத்திற்காக தற்போது பரமகுரு கைது செய்யப்பட்டுள்ளார்.