ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு 2019ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் ஆட்சியைப் பறிகொடுத்தார்.
பாஜகவுடன் நீண்ட காலம் கூட்டணியிலிருந்த சந்திரபாபு 2018ஆம் ஆண்டு கூட்டணியிலிருந்து வெளியேறி மோடி தலைமையிலான பாஜக-வை கடுமையாகத் தாக்கத் தொடங்கினார். 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது மோடிக்கு எதிராக அணி திரட்டி மோடியை வீழ்த்த பெரும்முயற்சி எடுத்தார்.
அவரின் கனவு பொய்த்து, அம்மாநிலத்திலேயே தனது ஆட்சியை பறிகொடுக்கும் பரிதாப நிலைக்குச் சென்ற சந்திரபாபு நாயுடு தற்போது மீண்டும் பாஜக பக்கம் கண்சிமிட்டி வருகிறார்.
ஆந்திராவின் தலைநகராக உருவாகிவரும் அமராவதி நகர் இந்தியாவின் வரைப்படத்திலிருந்து அண்மையில் நீக்கப்பட்டிருந்தது. இது குறித்து தெலுங்கு தேசம், மத்தியில் உள்ள பாஜக அரசுக்குக் கோரிக்கை வைக்கவே, உடனடியாக அது சரிசெய்யப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து சந்திரபாபு நாயுடு உள்துறை அமைச்சகத்துக்கு எழுதிய கடிதத்தில், ‘பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பதிவில், ஆந்திர மக்களின் விருப்பத்திற்கு இணங்க உள்துறை அமைச்சகம் விரைந்து நடவடிக்கை எடுத்தற்கு நன்றி.
இந்த சீரிய நடவடிக்கைக்குக் காரணமாக இருந்த பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சரான அமித்ஷாவுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்நடவடிக்கை மூலம் தெலுங்கு மக்களின் அன்பினை நீங்கள் பெற்றுவிட்டீர்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.
சந்திரபாபு நாயுடுவின் பேச்சில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றம் முக்கிய அரசியல் நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. மீண்டும் பாஜக-வுடன் கைகோர்க்கும் விதத்தில் மோடி – ஷாவுக்கு சந்திரபாபு நாயுடு சமிக்ஞை தருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.