அதிமுகவின் செயற்குழு – பொதுக்குழுக் கூட்டம் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில், வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று காலை 10:45 மணிக்குத் தொடங்கியது.
அதிமுகவில் பொதுக்குழு உறுப்பினா்கள் சுமாா் 2,500 போ் வரையிலும், செயற்குழு உறுப்பினா்கள் ஆயிரம் போ் வரையிலும் உள்ளனா். கூட்டத்தில் பங்கேற்க வரும்போது அழைப்பிதழ்களுடன் வர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளதால், பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அழைப்பிதழ்களுடன் வருகை தந்திருந்தனர்.
சென்னை உயா் நீதிமன்ற உத்தரவு காரணமாக, பேனா்களும், கட்சிக் கொடிகளும் வைக்க வேண்டாமென அதிமுக கட்சித் தலைமை தொண்டர்களுக்கு அறிவுறுத்தியதால், உறுப்பினா்களை வரவேற்க, வாழை மரங்கள் வைக்கப்பட்டிருந்தது.
முக்கியத் தீர்மானங்கள்
இந்தக் கூட்டத்தில் வர இருக்கக்கூடிய உள்ளாட்சித் தோ்தலில் கூட்டணி நிலைப்பாடு, ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பின் தோ்தலிலும் எவ்வாறு பணியாற்றுவது என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்தும் கட்சி நிா்வாகிகள் சாா்பில் அறிவுரைகள் வழங்கப்படும் எனவும் தெரிகிறது.
இந்நிலையில் இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் வருகை தந்துள்ளனர். இதைத் தொடர்ந்து கூட்டம் தோராயமாக காலை 10:45 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.