தலைநகர் டெல்லியில் கடந்த சில மாதங்களாக காற்று மாசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. வாகன நெரிசல் மற்றும் அண்டை மாநிலங்களில் விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் காற்றின் தரம் சுவாசிக்க முடியாத அளவிற்கு உள்ளது. காற்று மாசை கருத்தில் கொண்டே தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்க டெல்லி அரசு தடை விதித்தது. ஆனால் தடையை மீறி பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடிக்கப்பட்டது. அதனால் டெல்லியில் காற்று மாசு மேலும் அதிகரித்துள்ளது. டெல்லி நகர் முழுவதுமாக புகைமூட்டம் நிலவுகிறது.
அதனால் வெளியில் வருவோருக்கு சுவாச பிரச்சனைகள் உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை பள்ளி கல்லூரி வகுப்புகள் நேரடியாக நடைபெறாது. ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் தொடரும் என்று டெல்லி கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே காற்று மாசு காரணமாக பள்ளிகள் மட்டும் ஒரு வாரத்திற்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.