சாலையை கடக்க முயன்ற சிறுவன் பேருந்தின் முன் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அரசர்குளத்தில் சேக் இஸ்மாயில் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனக்கு சொந்தமாக ஒரு பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு முஹம்மது அஸ்மர் என்ற மகன் இருந்துள்ளான். இந்த சிறுவனும் அவரது தாத்தாவும் சேர்ந்து சாலையோரத்தில் சரக்கு வாகனத்தில் காய்கறி வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது சுப்ரமணியபுரத்திலிருந்து அறந்தாங்கிக்கு அரசு பேருந்து வந்துள்ளது. அச்சமயம் பேருந்து சத்தம் கேட்டு சிறுவன் சாலையின் மறு பக்கத்திற்கு செல்ல முயன்றுள்ளான்.
அப்போது எதிர்பாராத விதமாக அந்த சிறுவன் பேருந்தின் முன் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டான். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.