தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களாக அறிவிக்கப்பட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கு அரசு இலவச வீட்டுமனைகள் வழங்கியுள்ளது. அவ்வாறு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனைகள் முறையாக ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மக்களை சென்றடைந்துள்ளது குறிப்பிடப்படவில்லை. அவ்வகையில் திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் வட்டம் பொத்தூர் கிராமத்தில் சர்வே எண் 235 இல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
அந்தத் திட்டத்தின் அடிப்படையில் எந்தெந்த பயனாளிகள் பயனடைந்துள்ளனர் என்ற விவரங்களை அந்த மாவட்டத்தை சேர்ந்த குமார் என்பவர் கேட்டுள்ளார். அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரி பதிலளிக்கவில்லை. எனவே குமார், மாநில தகவல் ஆணையத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். இதையடுத்து மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்த மாநில தகவல் ஆணையர், அவர் கேட்கும் தகவல்களை 7 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் வழங்க வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும் இந்த இலவச வீட்டுமனை பெற்றவர்களின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளனர்.