வீடுகளை சூழ்ந்திருக்கும் மழைநீரை அகற்ற கோரி கிராம மக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி ஊராட்சிக்கு உட்பட்ட ரெட்டியூர் அருகாமையில் இருக்கும் மாரியம்மன் வட்டத்தில் 100-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் குட்டை நிரம்பி உபரி நீர் வெளியேறி அங்குள்ள வீடுகளை சூழ்ந்து இருக்கின்ற காரணத்தினால் ஒரு சில வீடுகளில் மழை நீர் புகுந்து இரண்டு நாட்களாகியும் வற்றாமல் இருந்து வருகிறது. அதன்பின் வீடுகளில் சேர்ந்து இருக்கும் மழைநீரை அகற்ற கோரி அந்த கிராம மக்கள் ஒன்று கூடி ரெட்டியூர் கூட்டு ரோட்டில் திடீரென அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் அரசு போக்குவரத்து உதவி ஆய்வாளர் விஜயன் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொன்னேரி ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி அருள் உள்பட பல அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி அருள், ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர் மற்றும் விநாயகம் ஆகியோரிடம் தொலைபேசி மூலமாக பேசி குட்டையின் கரையை பொக்லைன் இயந்திரம் மூலம் உடைத்து அதிலிருந்து வெளியேறும் மழைநீர் கிராமத்துக்குள் புகாமல் வேறு வழியில் திருப்பி விட வேண்டும், குட்டையில் இருந்து வெளியேற்றப்படும் நீரால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு குட்டையின் ஒரு பகுதி கரையை உடைத்து மழைநீர் கிராமத்துக்குள் புகாமல் வேறு வழியாக வெளியேற்றி உள்ளனர்.