தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட மத்திய அரசின் 7 பேர் அடங்கிய குழு இன்று சென்னை வந்தது.
டெல்லியில் இருந்து விமானத்தில் பிற்பகல் ஒரு மணிக்கு சென்னை வந்த இந்த குழுவினர் பிற்பகல் மூன்று முப்பது மணி அளவில் தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் வெள்ளச் சேதங்கள் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் ரிப்பன் மாளிகையில் வெள்ள பாதிப்புகள் குறித்த போட்டோ கண்காட்சியை பார்வையிட்ட அவர்கள் மீட்பு மற்றும் தற்போதைய நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
நாளை பிற்பகல் வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் மாலையில் புதுச்சேரியிலும் வெள்ள சேதங்களை ஒரு குழுவினர் பார்வையிடுகின்றனர். அதேநேரம் மற்றொரு குழுவினர் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிப்புகளை பார்வையிடுகிறார்கள். நாளை மறுநாள் கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் ஒரு குழுவினரும் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் மற்றொரு குழுவினரும் வெள்ள சேதங்களை பார்வையிடுகின்றனர்.
பின்னர் 24ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தலைமை செயலகத்தில் மத்திய குழு ஆலோசனை நடத்த உள்ளது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை கணக்கிட்டு மத்திய குழுவிடம் கூடுதல் நிதி கோர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.