இந்தியா-சிங்கப்பூர் இடையே வருகின்ற 29-ஆம் தேதி முதல் பயணிகள் விமான சேவை மீண்டும் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு இந்தியா-சிங்கப்பூர் இடையே கொரோனா தொற்று பரவல் காரணமாக வணிக ரீதியிலான பயணிகள் விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இருநாடுகளுக்கும் இடையே “தடுப்பூசி பயணப்பாதை” ( வி.டி.எல் ) என்ற பெயரில் வணிக ரீதியிலான பயணிகள் விமான சேவை தொடங்க ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது. மேலும் வருகின்ற 29-ஆம் தேதி முதல் இந்த சிறப்பு பயணத்திட்டம் தொடங்க உள்ளது. அதோடு மட்டுமில்லாமல் தினமும் 6 விமானங்கள் சென்னை, டெல்லி மற்றும் மும்பையில் இருந்து சிங்கப்பூருக்கு இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சிங்கப்பூர் வரும் இந்தியர்களுக்கு ( வி.டி.எல்) பயணத் திட்டத்தின் கீழ் கொரோனா கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் சிங்கப்பூரின் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் விமான நிறுவனங்கள் வி.டி.எல் அல்லாத விமானங்களையும் இந்தியா-சிங்கப்பூர் இடையே இயக்கலாம். எனவே இரு நாடுகளிலும் அமலில் உள்ள பொது சுகாதார கட்டுப்பாடுகளை அந்த விமானங்களில் பயணிப்பவர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.