தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் ஒவ்வொரு வாரமும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதலில் வாரத்தில் ஒரு நாள் மட்டும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வந்த நிலையில், இனி வரும் வாரங்களில் வாரத்தில் 2 நாட்கள் தடுப்பூசி முகாம் நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இதுவரை 10 தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், முதல்வர் அறிவுறுத்தலின்படி 10 தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு தடுப்பூசி முகாமிலும் அரசு நிர்ணயித்த இலக்கை விட அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி 75% பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 38 சதவீதம் பேருக்கும் இந்திய சராசரியை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.
நவம்பர் மாதத்தில் இறுதிக்குள் 100% தடுப்பூசி செலுத்துவதற்கு அரசு நிர்ணயித்துள்ளது. மேலும் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டால் 97.5 சதவிகிதம் உயிர் பாதுகாப்பு என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 4ஆவது அலை, 5ஆவது அலை என்று வந்தாலும் உயிரிழப்பு என்பது குறைவாகத்தான் இருக்கும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.