மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வண்டிகுடியிருப்பில் ராஜகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இவரது 3-வது மகனான ஹரிஹரன் என்பவர் வல்லன்குமாரன்விளையிலுள்ள ஒரு அரசு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் அவரது வீட்டின் முன்புறமுள்ள மின்விளக்கு எரியாமல் இருந்துள்ளது. அதனை சரி செய்ய ஹரிஹரன் முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஹரிஹரன் மீது மின்சாரம் பாய்ந்து அவன் அலறியபடி தூக்கி வீசப்பட்டான். உடனே அலறல் சத்தம் கேட்டு வந்த சிறுவனின் பெற்றோர் தங்களது மகன் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்பு அவனை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு அந்த சிறுவனை பரிசோதித்த மருத்துவர் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து அந்த சிறுவனின் பெற்றோர் காவல்நிலையத்தில் தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின் வழக்கு பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.