மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் வெளியிட்ட தேதியிலிருந்து இன்று வரை பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் பல்வேறு அரசியல் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. அதன் முக்கிய நிகழ்வாக, சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார், பாஜகவுடன் கைகோர்த்தது தான் அனைவரையும் வாயைப் பிளக்க வைத்தது. தேர்தல் பரப்புரையில் கீரியும் பாம்புமாக இருந்து வந்த தேவேந்திர ஃபட்னாவிஸும் அஜித் பவாரும் திடீரென்று நண்பர்களாகச் சேர்ந்து பொறுப்பேற்றுக் கொண்டது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
ஆனால், ஆட்சி செய்ய திட்டமிட்ட சிவசேனாவுக்கும் அதன் தொண்டர்களுக்கு இந்நிகழ்வு பெரும் எரிச்சலைத் தந்தது. இது ஒருபுறமிருக்க சரத் பவாரும், தேசியவாத காங்கிரஸின் தொண்டர்களும் அஜித் பவாரின் செயலால் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளாகினர். சரத் பவார் தங்களுடன் உள்ளார் என்று உத்தவ் தாக்கரே கூற, அதனை ஆமோதிக்கும் விதமாக பவாரும் பாஜக ஆட்சிக்கு ஆதரவில்லை என்றார் உறுதியாக.
அன்றே காங்கிரஸ் – தேசிய வாத காங்கிரஸ் – சிவசேனா ஆகிய மூன்று கட்சிகளும் ஆலோசனை நடத்தினர். பின்னர், மூன்று கட்சிகளும் சேர்ந்து மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைத்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. மேலும், அடுத்த 24 மணி நேரத்திற்குள் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தன.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டுவிட்டு, ஆட்சியமைக்க ஆளுநர் முதலமைச்சருக்கு அனுப்பிய கடிதம், முதலமைச்சர் ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு அனுப்பிய கடிதம் ஆகிய இரு கடிதங்களை இன்று காலை சமர்ப்பிக்குமாறு துணைத் தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, நேற்று திடீரென்று அஜித் பவார் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தனக்கு சரத் பவார் தான் தலைவர் என்றும், பாஜகவுடன் இணைந்து தேசியவாத காங்கிரஸ் ஐந்து ஆண்டுகள் நல்லாட்சியைக் கொடுக்கும்’ என்றும் பதிவிட்டிருந்தார்.
இதனை எதிர்த்த சரத் பவார், ‘பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்று திட்டவட்டமாகக் கூறினார். இந்தச் சூழலில் நேற்றிரவு முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸும், துணை முதலமைச்சர் அஜித் பவாரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். விவசாயிகளின் பிரச்னை குறித்து இருவரும் பேசினார்கள் என்று முதலமைச்சர் அலுவலக வட்டாரம் தெரிவித்தாலும், உச்ச நீதிமன்ற வழக்கு தொடர்பாக தான் அவசர அவசரமாக இருவரும் பேசினர் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து சூடு பிடித்த மகாராஷ்டிர அரசியல் களம், தற்போது வரை தணியவில்லை. இந்தச் சூழலில், உச்ச நீதிமன்றத்தில் இதன் விசாரணை தற்போது தொடங்கியுள்ளது. அப்போது மகாராஷ்டிராவில் பாஜகவை ஆட்சியமைக்க அழைத்த ஆளுநரின் கடிதம், உச்ச நீதிமன்றத்தில் சீலிடப்பட்ட உறையுடன் சேர்ந்து தாக்கல் செய்யப்பட்டது. உடன், பாஜக கூட்டணி எம்எல்ஏக்களின் ஆதரவுக்கடிதமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றம் இதற்குத் தீர்ப்பு வழங்கி அனைத்து அரசியல் குழப்பங்களுக்கும் தீர்வளிக்குமா என்பது சில மணி நேரங்களில் தெரிந்து விடும்.