தமிழகத்தில் தினசரி மின் தேவை 14000 மெகாவாட் என்ற அளவில் உள்ளது. இது கோடை காலத்தில் மேலும் அதிகரிக்கும். குளிர் காலத்தில் சற்று குறையும். ஆனால் தமிழ்நாட்டில் மின்சாரத்தின் தேவைக்கும் உற்பத்திக்குமான இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலைமையை சமாளிக்க வெளி சந்தைகளில் இருந்து மின்சாரத்தை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தமிழ்நாடு மின்வாரியம் தள்ளப்படுகின்றது. வெளிச் சந்தைகளில் இருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன.
தமிழகத்தின் மின் உற்பத்தியும், மின்சாரம் வழங்கி வந்த தனியார் நிறுவனங்களின் மின் உற்பத்தியும் கணிசமாக குறைந்து விட்ட நிலையில், மின்வெட்டை தவிர்க்க வெளிச் சந்தையில் இருந்து மிக அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க படுவதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வாங்குவதற்கு மின்வாரியத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மின் வாரியத்தின் அனல் மின் நிலையம், நீர்மின் நிலையம் மற்றும் எரிவாயு மின் நிலையங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரம் தினசரி மின் தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை.
அதனால் மத்திய அரசு மற்றும் தனியார் மின்நிலையங்களில் இருந்து மின்சாரம் வாங்கப்பட்டு வருகின்றது. இதனிடையே அடிக்கடி நிலக்கரி தட்டுப்பாடு நிலவுகிறது.அடுத்த 3 ஆண்டுகளுக்கு 1,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய மின்வாரியத்துக்கு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த மின்சாரத்தை யூனிட்டுக்கு ரூ.3.26 என்ற விலையில் வாங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எதிர்வரும் காலங்களில் மின் தடை ஏற்படும் வாய்ப்பு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.