தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிலும் குறிப்பாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தக்காளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
அதன்படி இன்று சென்னையில் ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி 110 ரூபாய்க்கும், வெளிச் சந்தைகளில் 150 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனைப் போலவே வெண்டைக்காய் 100 ரூபாய், சின்ன வெங்காயம் 90 ரூபாய், பீட்ரூட் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மழை காரணமாக வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர். இந்த விலை அதிகரிப்பு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.