நியூசிலாந்துடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்டத் தொடரில் விளையாடிவரும் இங்கிலாந்து அணி, இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி சௌதி, வாக்னர் பந்து வீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதன்மூலம் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியின் பென் ஸ்டோக்ஸ் 91 ரன்களை எடுத்தார். நியூசிலாந்து அணி தரப்பில் சௌதி நான்கு விக்கெட்டுகளையும், வாக்னர் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியில், பிஜே வாட்லிங், மிட்சல் சாண்டனர் அபாரமான தொடக்கத்தை தந்தனர். இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய வாட்லிங் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சத்ததைப் பதிவு செய்தார். இதன் மூலம் நியூசிலாந்து விக்கெட் கீப்பர்களில் டெஸ்ட் போட்டியில் சதமடித்த முதல் நபர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார்.
அதனைத் தொடர்ந்து மிட்செல் சாண்ட்னரும் தனது முதலாவது டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். இதன் மூலம் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 590 ரன்களில் டிக்ளேர் செய்தது. நியூசிலாந்து அணி தரப்பில் வாட்லிங் 205 ரன்களையும், சாண்ட்னர் 126 ரன்களையும் விளாசினர். இங்கிலாந்து அணியின் சாம் கர்ரன் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் விதத்தில் சாண்ட்னர் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். சிறப்பாக பந்துவீசிய வாக்னர் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன் மூலம் ஐந்தாம் நாள் தேனீர் இடைவேளைக்குப் பின் இங்கிலாந்து அணி 197 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.