மின்வேலியில் சிக்கி வாலிபர் இறந்ததை அடுத்து அவரது உடலை கிணற்றில் வீசிய விவசாயியை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோடேபாளையம் கிராம வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இங்குள்ள மேற்கு தோட்டத்தில் நட்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக தோட்டம் இருக்கிறது. இந்த தோட்டத்தை பவானிசாகர் அருகிலுள்ள குடில் நகரைச் சேர்ந்த விவசாயி துரைசாமி குத்தகைக்கு எடுத்து பயிர் செய்து வருகிறார். இந்நிலையில் இந்த தோட்டத்து கிணற்றில் வாலிபர் ஒருவர் இறந்து மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன், போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் மிதந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் இறந்த வாலிபர் கோடேபாளையம் வெற்றிவேல் நகரைச் சேர்ந்த கணேசன் மகன் மாரிச்சாமி என்பதும் இவர் விவசாய கூலி தொழிலாளி என்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்தது.
மேலும் இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் “துரைசாமி பயிரிட்டு இருந்த மல்லிகைப்பூ மற்றும் மிளகாய் போன்றவற்றை வனவிலங்குகள் சேதப்படுத்துவதை தடுக்க அவர் தோட்டத்தைச் சுற்றிலும் பேட்டரியில் இயங்கும் மின்வேலியை அமைத்துள்ளார். இந்நிலையில் தோட்டத்தை சுற்றிப் பார்க்க துரைசாமி கடந்த 19-ஆம் தேதி சென்றார். அங்கு மாரிச்சாமி மின்வேலியில் சிக்கி இறந்து கிடந்ததை துரைசாமி பார்த்துள்ளார். இதனால் பயந்துபோன துரைசாமி, மாரிச்சாமியின் சடலத்தை இழுத்துச் சென்று அருகிலிருந்த கிணற்றில் வீசியது” காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. அதன்பின் காவல்துறையினர் மாரிச்சாமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள விவசாயி துரைசாமியே வலைவீசி தேடி வருகின்றனர். இவ்வாறு மின்வேலியில் சிக்கி இறந்த மாரிச்சாமிக்கு தெய்வானை என்ற மனைவி இருக்கிறார்.