கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய குழுவினர் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தனர். இதில் மத்திய நிதித்துறை ஆலோசகர்கள் ஆர்.பி. கபில், நீர்வள ஆணையத்தின் இயக்குனர் தங்கமணி, தமிழக வருவாய்த் துறை செயலாளர் குமார் ஜெயந்த் ஆகியோர் கன்னியாகுமரி விருந்தினர் மாளிகையில் வெள்ள சேதம் குறித்த படங்களை பார்வையிட்டனர்.
அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெள்ள சேதம் குறித்து எடுத்துரைத்தார். பின்னர் வடக்கு தாமரை குளத்தில் சேதமடைந்த தடுப்பணையை பார்வையிட்டனர். குமாரகோவில், தேரகள்புதூர், பேயன்குழி, வைக்கலூர், திருப்பதிசாரம் ஆகிய இடங்களில் கால்வாய் உடைப்பு மற்றும் சாலைகள், பயிர் சேதம் ஆகியவற்றை மத்திய குழுவினர் பார்வையிட்டு சென்றனர்.