டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று பாதுகாப்புத் துறை சார்ந்த விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் வீரதீர செயல்களில் ஈடுபட்ட வீரர்களுக்கு விருது வழங்கப்பட்டது. அதில் தமிழகத்தை சேர்ந்த அபிநந்தன் கமாண்டர் பாகிஸ்தானுக்கு எதிராக தாக்குதலின்போது தீரத்துடன் போராடியதற்காக ஜனாதிபதி வீர் சக்ரா விருது வழங்கினார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்,”என் வயிறு புலி தங்கியிருந்த குகை. என் மகன் போர்க்களத்தில் தான் இருப்பான்’ என்று புறநானூறு பாடிய தமிழ் மண்ணின் வீரம் செறிந்த மகனாகச் செருக்களம் சந்தித்துத் தாயகம் காத்த அபிநந்தன் வர்த்தமான் அவர்கள் வீர் சக்ரா விருது பெற்றதற்குப் பெருமகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன்” என்று முதல்வர் பதிவிட்டுள்ளார்.