தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டுக்கான அனைத்து பருவ தேர்வுகளும் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. அரசின் பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடித்தும், சுழற்சி முறையிலும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் பெரும்பாலான கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடித் தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனாலும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் நலன் கருதி இதுவரை நேரடி வகுப்புகள் தொடங்கப்படாமல் இருந்தது. அதனால் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் நாடு முழுவதும் 18 வயதிற்கு மேல் உள்ள ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதை கருத்தில்கொண்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் 2 , 3 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இன்று முதல் ஜனவரி மாதம் வரை நேரடி வகுப்புகள் நடைபெறும் என்றும் முதலாமாண்டு மாணவர்களுக்கு ஜனவரிக்கு பிறகு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.