ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 42 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
ஆந்திரா மாநிலத்தில் இருந்து தேனி வழியாக கேரளாவிற்கு கஞ்சா கடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் தேனி மாவட்டம் கம்பம் வடக்கு காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் விஜய் ஆனந்த் தலைமையில் காவல்துறையினர் கம்பம்மெட்டு புறவழி சாலையில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் அப்பகுதியாக வந்த 2 கார்களை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த கார்களில் கஞ்சா மூட்டைகள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. இதனைஅடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து காரில் இருந்த கேரளாவை சேர்ந்த ராஜேஷ், பாலக்காட்டை சேர்ந்த சந்தோஷ்குமார், சுஜேஷ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் ஆந்திராவில் இருந்து சட்டவிரோதமாக கடத்தி வந்த 42 கிலோ கஞ்சாவையும், 2 கார்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.