சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு விளையாட்டு மூலமாக பாடம் கற்பிக்கும் நிகழ்ச்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு போக்சோ சட்டம் பற்றி ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. இதனைப் போலவே தனியார் பள்ளிகளுக்கும் இத்தகைய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும். இந்த இடத்தில் தங்கள் பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்று யாரும் நினைக்க கூடாது. பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்த கூடிய வகையில் பள்ளி நிர்வாகம் செயல்பட வேண்டும்.
அனைத்து பள்ளிகளும் முழுமையாக செயல்படத் தொடங்கிய பிறகு இதற்கான பலன்கள் கிடைக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார். பாலியல் புகார் தெரிவிக்க இலவச அழைப்பு எண்கள் 1098, 14417 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். வருகின்ற கல்வியாண்டு முதல் அனைத்து பாடப் புத்தகங்களிலும் இந்த உதவி எண்கள் அச்சிடப்படும். தற்போதைக்கு மாணவர்களின் நோட்டுப் புத்தகங்களில் ஸ்டாம்ப் மூலம் இலவச உதவி எண்கள் இடம் பெற செய்யப்படும். மாணவர்களின் கற்றல் குறைபாட்டை சரிசெய்ய இல்லம் தேடி கல்வித்திட்டம் போதுமானதாக இருக்கும் என்று நம்புகின்றோம்வ என்று அமைச்சர் கூறியுள்ளார்.