குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்டு அவல நிலையான வாழ்க்கையை திருநங்கைகள் வாழ்ந்து வருகின்றனர். சினிமாவிலும் நிஜத்திலும் கேலிக்குரிய பொருளாகவே அவர்கள் பாவிக்கப்பட்டனர். அவர்களை அங்கீகரித்து காட்சிகள் வைக்கும் படங்களும் சொற்பமே.இந்த சூழலில், சொல்லவே நா கூசும் இழி சொற்களைக் கொண்டு அவர்களை அழைக்கும் பெயர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கிலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ‘திருநங்கை’ என்று பெயரிட்டு, இந்தியாவிலேயே முதன்முறையாக அவர்களுக்கான நலவாரியத்தையும் அமைத்தார். அதன்மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர்களுக்கு வழங்கி சமூகத்தில் சம அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்தார். பின்னர் ’திருநங்கை’ என்ற பெயர் அனைத்து அரசு ஆவணங்களிலும் உபயோகப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், திருநங்கை என்ற பெயரை எடுத்துவிட்டு ‘மூன்றாம் பாலினத்தவர்’ என்ற பெயரை அரசு ஆவணங்களில் பயன்படுத்த ஆளும் அரசு அறிவிப்பு வெளியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 22ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசின் பத்திரிகை செய்தியில், திருநங்கை என்ற பெயர் இருந்த அனைத்து இடங்களிலும், மூன்றாம் பாலினத்தவர் என்று பேனாவால் திருத்தி எழுதப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இன்னும் சில நாட்களில் ’திருநங்கை’ என்ற சொல்லை நீக்கிவிட்டு, ’மூன்றாம் பாலினத்தவர்’ என்ற சொல்லை அனைத்து அரசு ஆவணங்களிலும் பயன்படுத்த அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிடப் போவதாகவும் கூறப்படுகிறது.