தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வுகள் பிப்ரவரி மாதத்தில் நடத்தப்படும் என்றும் அதற்கான விண்ணப்பங்களை தாக்கல் செய்யலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வுகள் இந்த வருடம் முதல் கணினி வழி தேர்வாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. துறை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள், தங்களின் ஆதார் விவரங்களை கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடத்த வேண்டிய துறை தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 1 முதல் 9 ஆம் தேதி வரை நடத்தப்படும். இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தற்போது தொடங்கியுள்ளது. தேர்வர்கள் டிசம்பர் 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கொள்குறி வகையில், சரியான விடையை தேர்வு செய்யக்கூடிய அப்ஜெக்டிக் வினாத்தாள்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்தப்படும். அதேசமயம் விரிவாக பதில் எழுத வேண்டிய தேர்வர்களுக்கு வழக்கம்போல எழுத்துத் தேர்வு நடத்தப்படும். மேலும் துறை தேர்வுக்கான திருத்தப்பட்ட பாடத்திட்ட விவரங்கள் அனைத்தும் டிஎன்பிஎஸ்சி www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.