தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது தொடர் விடுமுறை காரணமாக மீதமுள்ள பாடங்களை நடத்தி முடிப்பதற்கு சிரமமாக உள்ளது. அதனால் இனி வரும் நாட்களில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பொதுத்தேர்வை ரத்து செய்யப்பட்டதால், இந்த ஆண்டு கட்டாயம் பொதுத் தேர்வு நடைபெறும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகளை ஒத்தி வைக்கப்போவதில்லை என்றும் தேர்வை எதிர்கொள்ள வசதியாக 35 சதவீதம் முதல் 50% வரை பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மேலும் பாலியல் புகார் பற்றி தெரிவிக்க இலவச அழைப்பு எண் 1098, 14417 விலையில்லாத நோட்டுப் புத்தகங்களில் ரப்பர் ஸ்டாம்பு முறையில் அச்சிட்டு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.