6 மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கருப்பூரில் கோபிநாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் முத்துகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோபிநாத்தை கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது நடுக்காவேரியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக கோபிநாத் காவல்துறையினரிடம் கூறினார்.
இதனையடுத்து காவல்துறையினர் வேல்முருகன் வீட்டை சோதனை மேற்கொண்டபோது அங்கு 176 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அதன்பின் காவல்துறையினர் வேல்முருகனிடம் விசாரணை மேற்கொண்டபோது அவர் கோபிநாத் வீட்டில் இருசக்கர வாகனத்தை திருடி மறைத்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனைதொடர்ந்து கோபிநாத் வீட்டிற்கு சென்று காவல்துறையினர் சோதனை செய்தபோது அங்கு 6 இருசக்கர வாகனங்கள் இருப்பது தெரியவந்தது. அதன்பின் கோபிநாத், வேல்முருகன் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் மோட்டார்சைக்கிள்கள் மற்றும் மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.