Categories
தேனி மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து 3 குடும்பத்தினர்… தீக்குளிக்க முயற்சி… ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

அடுத்தடுத்து 3 குடும்பத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் பல்வேறு பகுதியை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு தங்கள் மனுக்களை அளித்துள்ளனர். இந்நிலையில் அம்மச்சியாபுரத்தை சேர்ந்த மாரியம்மாள் என்பவர் தனது ஒரு வயது கைக்குழந்தையுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று திடீரென மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி மாரியம்மாளிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் எனது கணவர் முருகேஸ்வரன் என்னுடன் சேர்ந்து வாழ மறுக்கிறார் என்றும், அவரை என்னுடன் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் மாரியம்மாளை தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து சிறிது நேரத்திற்கு பிறகு சக்கம்பட்டி பகுதியில் கூலித் தொழிலாளியான பெரிய கருப்பன் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சென்று மண்ணெண்ணெய் உடலில் ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளனர். அப்போது அங்கு நின்று காவல்துறையினர் பெரிய கருப்பன் மற்றும் குடும்பத்தினரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது பெரியகருப்பன் பூர்விக நிலத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன் தவறான பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் நிலையில் தற்போது பேரூராட்சி சார்பில் அவரது இடத்தில் சாக்கடை கால்வாய்கள் கட்டி வருகிறது.

அதனை தடுத்து நிறுத்த வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவரையும் தேனி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே மதுரை ஆணையூரை சேர்ந்த ராமுத்தாய், அவரது மகன் ஜனகராமன் ஆகியோர் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து  காவல்துறையினர் சந்தேகமடைந்து மூதாட்டி வைத்திருந்த பையை சோதனை செய்ததில் அதில் மண்ணெண்ணெய் பாட்டில் இருந்துள்ளது. இதனை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவர்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். மேலும் அடுத்தடுத்து மூன்று குடும்பத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |