வேளாண் சட்டங்கள் ரத்து என்பது பிரதமர் மோடியின் பெருந்தன்மையை காட்டுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை தியாகராய நகரில். பாஜக தலைமை அலுவலகத்தில் மாநகராட்சி தேர்தலுக்கான விருப்ப மனு இன்று முதல் பெறப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மாநில துணைத்தலைவர் விபி துரைசாமி ஆகியோர் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடமிருந்து மனுக்களை பெற்றனர். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை” தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விருப்பமான பெற்று வருகின்றோம்.
சென்னை மாநகராட்சியில் போட்டியிட இதுவரை 536 பேரிடம் இருந்து மனுக்கள் பெறப் பட்டுள்ளது. தேர்தல் தேதி இன்னும் தெரிவிக்காததால் தனித்து போட்டியா அல்லது கூட்டணி போட்டியா என்பது குறித்து நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. அதிமுகவுடன் தேசிய ஜனநாயக கூட்டணி தொடரும். தேர்தல் நாள் நெருங்கியதும் அது தொடர்பான அறிவிப்பு வெளியாகும். பாமகவில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கூட ஆள் இல்லை என்று மருத்துவர் ராமதாஸ் கூறியது, அது அவரின் தனிப்பட்ட கருத்து. வேளாண் சட்டத்தை பற்றி அதிகமாக பேசியதை பெருமையாகத்தான் கருதுகிறேன்.
வேளாண் சட்டத்தை போல் நீட் சட்டம் ரத்து செய்யப்படுமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் இருந்து அரசியல் காரணங்களுக்காக மட்டுமே நீட் தேர்வை எதிர்க்கின்றனர். நீட் சட்டம் உச்ச நீதிமன்றத்திற்கு சென்று வெற்றி பெற்ற சட்டம். இதனை யாரும் தடுக்க இயலாது. நீட்தேர்வு சாதாரண மாணவர்களுக்கு கூட கிடைக்கும் வரப்பிரசாதம். விவசாய சட்டத்தை வாபஸ் பெறுவோம் என்று பிரதமர் கூறியது அவரின் பெருந்தன்மை. விவசாயிகளின் மீது தடியடி நடத்தியது மோடிதான் என்று கூறுவது நியாயம் இல்லாதது. இதில் வெற்றி தோல்வி என்பது இல்லை. இதற்கான சூழல் மீண்டும் வரலாம். அப்போது விவசாயிகள் ஏற்றுக் கொள்ளலாம். இந்த சட்டத்தை சில மாநிலங்களில் உள்ள விவசாயிகள் மட்டுமே புரிந்து கொள்ளவில்லை” என்று தெரிவித்தார்.