தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக சென்னையில் பெய்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இது ஒருபுறமிருக்க சென்னையில் தொடர் மழை காரணமாக தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டு வருகின்றது. 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி தற்போது மழை மற்றும் புயல் காரணமாக சரசரவென விலை உயர்ந்து 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறிகளில் தக்காளி ஒரு கிலோ 85 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும். பொதுமக்களுக்கு குறைவான விலையில் தக்காளி விற்பனை செய்ய நாளொன்றுக்கு 15 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்படும். 65 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் அனைத்து காய்கறிகளுடன் தக்காளி விற்க நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.