பெண்ணை கொலை செய்து உடலை சாக்குமூட்டைக்குள் கட்டி வீசி சென்றவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள ரங்கம்பாளையம் கே.கே.நகர் லட்சுமி கார்டன் குடியிருப்பு பகுதியில் ஒரு காலி இடத்தில் கடந்த 12-ஆம் தேதி ஒரு சாக்கு மூட்டை கிடந்தது. இதனையடுத்து கடந்த 13-ஆம் தேதி அந்த சாக்கு மூட்டைக்குள் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தபோது அதில் பெண்ணின் உடல் இருந்தது. அதன்பின் காவல்துறையினர் அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதற்கிடையில் பிரேத பரிசோதனை முடிவில் அந்த பெண்ணை கழுத்தை மிதித்து கொலை செய்தது தெரியவந்தது. இதனால் கொலையாளிகளை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடாக சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த கட்டிட மேற்பார்வையாளர் யோகநாதன் என்பவரின் செயல்பாடுகள் சந்தேகப்படும்படி இருந்தது. இதன் காரணமாக காவல்துறையினர் யோகநாதனை தீவிரமாக கண்காணித்து வந்தனர். மேலும் அவருடைய செல்போனை காவல்துறையினர் வாங்கி ஆய்வு மேற்கொண்டபோது அது கடந்த 9-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை அணைக்கப்பட்டு இருந்தது. அதற்கு முன்பாக 15 நாட்களாக யோகநாதன் அடிக்கடி மற்றொரு எண்ணுக்கு தொடர்புகொண்டு பேசியதும் காவல்துறையினருக்கு தெரியவந்தது.
இதனைதொடர்ந்து காவல்துறையினர் அந்த எண்ணை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் அது கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்பவருடைய செல்போன் எண் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. ஆனால் அந்த எண் கடந்த 11-ஆம் தேதியிலிருந்து அணைக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக காவல்துறையினர் யோகநாதனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டபோது அவர் ஜெயலட்சுமி கொலை செய்ததை ஒப்பு கொண்டார். இதுகுறித்து யோகநாதன் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்தார். அதாவது “எனக்கு பிரியா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. கடந்த 6 வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக என் மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் நான் வேறு பெண்ணை திருமணம் செய்தேன். அவரும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு என்னைவிட்டு பிரிந்து சென்றார்.
இதன் காரணமாக மீண்டும் திருமணம் செய்துகொள்ள தனியார் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்தேன். இந்நிலையில் அந்த தகவல் மையத்தில் இருந்து எனக்கு ஒரு பெண்ணின் செல்போன் எண்ணை அனுப்பினார்கள். அப்போது அந்த பெண்ணிடம் நான் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினேன். அதன்பின் நாங்கள் இருவரும் அடிக்கடி பேசி வந்தோம். இந்த நிலையில் அந்த பெண் தான் கோவையில் முதியவர் ஒருவரை பராமரிக்கும் வேலை செய்து வருவதாக என்னிடம் தெரிவித்தார். மேலும் அவர் தன்னுடைய கணவர் இறந்து விட்டதாகவும், தனக்கு 3 மகள்கள் இருப்பதாகவும் என்னிடம் தெரிவித்தார். அதுமட்டுமின்றி அந்த பெண் என்னை நேரில் பார்த்து பிடித்தால் திருமணம் செய்து கொள்வதாக கூறினார். அதன்படி நான் அவரை பார்ப்பதற்காக கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்துக்கு சென்றேன். அங்கு அந்த பெண்ணும் வந்திருந்தார். அவரைப் பார்த்ததும் எனக்கு பிடிக்காததால் நான் அவரை திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்தேன்.
அப்போது அந்த பெண் நான் வேலையை விட்டு வந்ததால் அங்கு திரும்பி செல்ல முடியாது என்று என்னிடம் தெரிவித்தார். ஆகவே இன்று ஒரு நாள் மட்டும் உங்களுடைய வீட்டில் தங்கிவிட்டு மறுநாள் தனது சொந்த ஊருக்கு சென்று விடுவதாக அவர் என்னிடம் கூறினார். இதனை நம்பி நான் அந்த பெண்ணை கடந்த 8-ஆம் தேதி என் வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். ஆனால் அந்த பெண் தெரிவித்தபடி மறுநாள் ஊருக்கு செல்லவில்லை. அதற்கு மாறாக அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும், இல்லையென்றால் 10 பவுன் நகை கொடுக்கும்படியும் என்னிடம் கேட்டுகொண்டார். இப்படி செய்யாவிட்டால் ஊரை கூட்டி உன்னை அசிங்கப்படுத்தி விடுவேன் என்றும் அவர் என்னை மிரட்டினார். இதனால் பயந்துபோன நான் அந்த பெண்ணை வீட்டில் தங்க அனுமதித்தேன்.
இந்நிலையில் அந்த பெண் மீண்டும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி என்னை வற்புறுத்தினார். இதற்கு நான் மறுப்பு தெரிவித்ததால் அந்த பெண் உடனடியாக ஊரை கூட்ட போகிறேன் என வீட்டை விட்டு வெளியில் ஓடினார். இதன் காரணமாக நான் அந்த பெண்ணை கையால் அடித்ததில் அவர் மயங்கி விழுந்து விட்டார். மேலும் என்னுடைய காலால் அந்த பெண்ணை கழுத்தில் மிதித்ததில் அவர் இறந்துவிட்டார். இதனைதொடர்ந்து அவருடைய உடலை நான் சாக்கு மூட்டைக்குள் வைத்து தைத்து எனது மோட்டார் சைக்கிளின் மூலம் எங்கள் பகுதியில் உள்ள காலி இடத்தில் வீசிவிட்டு வந்துவிட்டேன்” என்று அவர் காவல்துறையினரிடம் தெரிவித்தார். இது தொடர்பாக யோகநாதனை காவல்துறையினர் கைது செய்தனர்.