தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வங்கக்கடலில் உருவாக்கிய 2 காற்றழுத்த தாழ்வு பகுதி யின் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. கடந்த மாதம் 25ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழையின் மூலம் தற்போது வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பை விட கூடுதலாக மழை பதிவாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் நீர்நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வழிகின்றன. அதனால் பல மாவட்டங்களில் வெள்ள பாதிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதனால் சென்னையில் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி 26, 27 ஆகிய நாட்களில் மிக கனமழையும், நவம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குமரி கடல், மன்னார் வளைகுடா மற்றும் வங்க கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்த 4-5 நாட்களுக்கு தொடர்ந்து வட தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் காலநிலை ஆர்வலர் “தமிழ்நாடு வெதர்மேன்” கூறியுள்ளார். 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு இருந்த தொடர் மழையை போல, இந்த முறை இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.