கர்நாடகாவில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நிவாரணங்களை அறிவித்தார்.
கர்நாடக மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல பகுதிகளில் கனமழை பெய்தது. வரலாறு காணாத மழையால் ஏரி, குளம், குட்டைகள் என நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன. பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. மேலும் தலைநகர் பெங்களூருவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்து வருகிறார்.
அதன்படி முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு ரூபாய் 5 லட்சமும், பகுதி அளவு சேதமடைந்த வீடுகளுக்கு ரூபாய் ஒரு லட்சம் வழங்குவதாக தெரிவித்துள்ளார். மேலும் மழை நீர் புகுந்தது பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ரூபாய் 10 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே பசுவராஜ் பொம்மையை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி கர்நாடகாவில் மழை வெள்ள பாதிப்புகளை குறித்து கேட்டறிந்தார். மேலும் மத்திய அரசு தேவையான உதவிகளை வழங்கும் எனவும் உறுதியளித்தார்.