பெயர் ஒற்றுமையை பயன்படுத்தி பாஸ்போர்ட் பெற்ற விவசாயி காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தொருவாளூர் கிழக்கு தெருவில் முருகன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாடு செல்வதற்காக மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்து இருந்துள்ளார். இந்நிலையில் இவரது விண்ணப்பத்தை பரிசீலித்த போது அவரது பெயர், முகவரி மற்றும் சான்றிதல்களை பயன்படுத்தி ஏற்கனவே பாஸ்போர்ட் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்தியபோது அதே பகுதியை சேர்ந்த பாண்டி என்பவரது மகன் முருகன் என்பவர் பெயர் ஒற்றுமையை பயன்படுத்தி மேற்கண்ட வாலிபரின் பெற்றோரிடம் பொய்யான காரணங்களை கூறி அவரது சான்றிதழ் மற்றும் ஆவணங்களை பெற்று புகைபடத்தை மட்டும் மாற்றி பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மதுரை பாஸ்போர்ட் அலுவலக முதுநிலை கண்காணிப்பாளர் இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி பாண்டி மகன் முருகன் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.