வடமாநில தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பீகார் மாநிலத்தில் ரித்தேஸ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனில்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவினாசி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியை பழகி வந்துள்ளார். இதனையடுத்து அனில்குமார் அந்த சிறுமியை காதலிப்பதாக கூறி வாட்ஸப்பில் தகவல் அனுப்பி வந்துள்ளார். இந்த தகவலை அந்த சிறுமி ரவிச்சந்திரன் என்பவரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ரவிச்சந்திரன் அனில்குமாரை நேரில் சந்தித்து எச்சரித்துள்ளார். ஆனால் அனில்குமார் ரவிச்சந்திரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அணில்குமார் எம்.நாதம்பாளையத்தில் உள்ள மளிகை கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த ரவிச்சந்திரன் அவரது நண்பர்களான பாபு, மணிகண்டன், ரஞ்சித் ஆகியோருடன் அங்குள்ள காட்டுப் பகுதிக்கு அனில்குமாரை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர்கள் அனில்குமாரை மரக்கட்டையால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனால் மயக்கமடைந்த அனில்குமாரை அவருடைய நண்பர்கள் அவினாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட சிகிச்சை பலனின்றி அனில்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ரவிச்சந்திரன், பாபு, மணிகண்டன், ரஞ்சித் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.