தமிழக முழுவதும் பெய்த தொடர் மழை காரணமாக கடந்த 1 மாதமாகவே காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நேற்று தக்காளி 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து பெருமளவில் தக்காளி சென்னைக்கு வரும். ஆனால் அண்மைகாலமாக 3 மாநிலங்களிலும் கனமழை பெய்ததால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் சென்னை கோயம்பேட்டிற்கு வரும் தக்காளி வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடந்த 1 மாதமாகவே தக்காளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், நேற்று மொத்த விலையில் தக்காளியின் விலை 1 கிலோ 120,140 க்கு விற்கப்படுகிறது. சில்லரை விலையில் தக்காளி 1 கிலோ 140 லிருந்து 200 வரை விற்கப்படுகிறது.எனவே இது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுத்து தக்காளி விலையை குறைக்க வேண்டும் என பொதுமக்களும், வியாபாரிகளும் கேட்டுக் கொண்டனர்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை காய்கறி மார்க்கெட்டில் கடந்த சில தினங்களாக காய்கறிகளின் விலை கடும் உச்சத்தில் இருந்து வருகிறது. 10 தினங்களுக்கு முன்பு 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 1 கிலோ தக்காளியின் விலை நேற்று கிலோ 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் கத்தரிக்காய் நேற்று 160 ரூபாய்க்கும் வெண்டைக்காய் கிலோ 60 ரூபாய்க்கும், பீன்ஸ் கிலோ 90 ரூபாய்க்கும், அவரை கிலோ 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இதனால் பொதுமக்கள் காய்கறி வாங்க முடியாமல் மிகுந்த சிரமம் அடைகின்றனர். ஈரோடு மாவட்டம் நேதாஜி காய்கறி சந்தையில் தக்காளியை வாங்க மக்கள் யாரும் முன்வராததால் அதிகளவில் தேக்கம் அடைந்து அழுகி வீணாகி வருவதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.