தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் மூலமாக பாலியல் சீண்டல்கள் அதிகரித்து வருகிறது. அதனால் சில மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதனை சரிசெய்யும் முயற்சியில் அரசு தற்போது களமிறங்கியுள்ளது. அதற்காக அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் போக்சோ சட்டம் குறித்து ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில்அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு ஏற்படும் பாலியல் சீண்டல்கள் பற்றி புகார் தெரிவிக்க வசதியாக அவர்களுக்கு பள்ளியில் வழங்கப்படும் விலையில்லா நோட்டு புத்தகங்கள் இலவச தொலைபேசி எண்கள் 1098, 14417 ரப்பர் ஸ்டாம்பில் அச்சடிக்கப்பட்டு வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி தெரிவித்துள்ளார். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு போக்சோ சட்டம் பற்றி ஆலோசனைகள் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.