கலெக்டர் அலுவலகம் முன் 4 பேர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள உலிபுரம் கிராமத்தில் மாரியாயி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமார் என்ற மூத்த மகன் இருக்கிறார். இதில் குமாருக்கு தர்னிஷ் என்ற மகனும், நர்ஷினி என்ற மகளும் இருக்கின்றனர். இவர்கள் 4 பேரும் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்தனர். இந்நிலையில் அவர்கள் 4 பேரும் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தீக்குளிக்க முயன்றவர்களை தடுத்து நிறுத்தியதோடு, அவர்களின் உடலில் தண்ணீரை ஊற்றினர்.
இதனையடுத்து விசாரணை நடத்துவதற்காக காவல்துறையினர் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து மாரியாயி மற்றும் அவரது மகன் குமார் கூறியதாவது “கடந்த 2005-ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம் நாங்கள் 2.72 ஏக்கர் நிலத்தை 1 லட்சத்து 65 ஆயிரம் கொடுத்து விலைக்கு வாங்கினோம். இந்நிலையில் தற்போது நாங்கள் அங்கு வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். அந்த வீட்டுக்கு சென்று வர நாங்கள் பொது வழிப்பாதையை பயன்படுத்தி வந்தோம். ஆனால் தற்போது அதே பகுதியை சேர்ந்த சில பேர் அந்த பாதையை ஆக்கிரமித்து கல்லை வைத்து அடைத்துவிட்டனர்.
இதன் காரணமாக நாங்கள் அவசர தேவைக்கு கூட வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது பற்றி சம்பந்தப்பட்ட நபரிடம் நாங்கள் கேட்டால் சாதி பெயரை சொல்லி திட்டி கொலை மிரட்டல் விடுக்கிறார். இதனால் பள்ளிக்கூடத்திற்கு குழந்தைகள் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்நிலையத்திலும், தாசில்தாரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் தான் நாங்கள் மன வேதனையுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தீக்குளிக்க முயற்சி செய்தோம். எனவே நடைபாதையை ஆக்கிரமித்து எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர்கள் கூறினர்.