இறந்தவர் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடி முத்தம்பட்டி பகுதியில் வசித்து வரும் ஆதிதிராவிடர் மக்களுக்கு மயானத்துக்கு செல்வதற்கு பாதை வசதி இல்லை. இதனால் பாதை வசதி கேட்டு அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் இறந்து விட்டார். அவரது உடலை அடக்கம் செய்ய ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. ஆகவே மயானத்திற்கு செல்ல பாதை வசதி அமைத்து தரக்கோரி சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இறந்தவர் உடலை வைத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் சாலையில் அமர்ந்து ஒப்பாரி வைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த தாசில்தார் வரதராஜன், இன்ஸ்பெக்டர் உமாசங்கர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அப்போது ஆற்றை கடந்துதான் இறந்தவர் உடலை மயானத்திற்கு எடுத்து செல்லும் நிலை இருப்பதால் உடனே பாதை அமைத்து தர வேண்டும் என்று அவர்கள் அதிகாரிகளிடம் கூறினர். இதனையடுத்து தாசில்தார் நடத்திய பேச்சுவார்த்தையில் அவர்களுக்கு உடன்பாடு ஏற்பட்டது. அதன்பின் உடனடியாக ஆற்றின் கரையோரம் பாதை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து முத்தம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா செந்தில் தலைமையிலான குழுவினர் பொக்லைன் எந்திரத்தின் மூலம் ஆற்றங்கரையில் உள்ள முட்புதர்களை அகற்றி மயானத்திற்கு பாதை வசதி செய்து கொடுத்தனர். இதனிடையில் இறந்தவரது உடலை அவரது உறவினர்கள் உடனே அடக்கம் செய்யவும் முடிவு செய்தனர். இதற்காக ஆற்றில் இறங்கி இடுப்பளவு தண்ணீரில் நனைந்தபடி இறந்தவர் உடலை அவரது உறவினர்கள் எடுத்து சென்று மயானத்தில் அடக்கம் செய்தனர். இவ்வாறு நடைபெற்ற போராட்டத்தினால் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.