தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரன் விடுதலைப்புலிகள் ஆட்சியில் இருந்தபோது யாரும் போதைப் பொருளுக்கு அடிமையாகவில்லை என்று இலங்கை நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.
நேற்று 2022-ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் குறித்த விவாதம் இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ளது. அதில் பேசிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரன் போர் காலங்களில் உயிரிழந்த மாவீரர்களை மக்கள் நினைவு கூர்ந்து விடுவார்கள் என்பதற்காக தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் காவல்துறையினர் ஒவ்வொரு இல்லங்கள் முன்பாகவும் குவிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் வடக்கு பகுதியில் 2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு தான் போதைப் பொருள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் விடுதலைப்புலிகள் ஆட்சியில் இருந்தபோது போதைப்பொருளுக்கு யாரும் அடிமையாகவில்லை என்று பேசியுள்ளார். இந்த நிலையில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரன் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டதாக கூறி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டினை கடுமையாக எதிர்த்த சிவஞானம் சிறீதரன் நான் பதவிக்காக ஆளும் தரப்பின் கால்களை கழுவி பிழைக்கவும் வரவில்லை, அரசுக்கு வக்காலத்து வாங்கும் கையாளும் அல்ல என்று கூறியுள்ளார். அதேபோல் தமிழர்கள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தாங்கள் நியாயமான தீர்ப்பை தான் முன் வைக்க வேண்டும் என்று சிவஞானம் சிறீதரன் கூறியுள்ளார்.