Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“வேலை வாங்கி தருவதாக மோசடி” 4 பேரின் துணிச்சலான செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியரை காரில் கடத்தி சென்று தாக்குதல் நடத்திய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம் மாவட்டத்திலுள்ள சீலநாயக்கன்பட்டி வேலு நகரில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஆனந்தன் என்ற தம்பி இருக்கிறார். இவர்களுக்கு கிருஷ்ணகுமார் என்ற நண்பர் இருக்கிறார். இந்த நிலையில் லட்சுமணனுக்கும் மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த சண்முகராஜேஸ்வரன் என்பவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டது. இதில் சண்முகராஜேஸ்வரன் கரூர் மாவட்ட சர்வேத்துறையில் வேலை பார்த்தவர் ஆவார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு லட்சுமணன், ஆனந்தன், கிருஷ்ணகுமார் உட்பட சிலரிடம் இருந்து சண்முகராஜேஸ்வரன் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 18 லட்சம் ரூபாய் வரை பெற்று கொண்டதாக கூறப்படுகிறது.

ஆனால் அவர்களுக்கு சண்முகராஜேஸ்வரன் வேலை வாங்கி கொடுக்கவில்லை என்று தெரிகிறது. மேலும் வாங்கிய பணத்தையும் அவர்களுக்கு சண்முகராஜேஸ்வரன் திருப்பி கொடுக்கவில்லை. இதன் காரனாக லட்சுமணன், ஆனந்தன், கிருஷ்ணகுமார் மற்றும் அவர்களுடைய நண்பரான பெங்களூருவை சேர்ந்த மஞ்சுநாதன் ஆகிய 4 பேரும் சண்முகராஜேஸ்வரனிடம் இருந்து அந்த பணத்தை பெறுவதற்காக திட்டம் தீட்டினர். இதனையடுத்து 4 பேரும் சண்முகராஜேஸ்வரனுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நண்பர் ஒருவருக்கு அரசு வேலை வாங்கி கொடுக்க வேண்டும் என்றும் இதற்காக அவர் 5 லட்சம் ரூபாய் வைத்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் அந்த பணத்தை நீங்கள் சேலம் வந்து பெற்று கொள்ளுமாறும் அவர்கள் சண்முகராஜேஸ்வரனிடம் தெரிவித்தனர். இதனை நம்பி சண்முகராஜேஸ்வரனும் காரில் சீலநாயக்கன்பட்டிக்கு வந்தார். அப்போது சண்முகராஜேஸ்வரனை, அவர்கள் 4 பேரும் காரில் கடத்தி தாதகாப்பட்டி வேலு புதுதெருவில் உள்ள ஆனந்தன் வீட்டுக்கு அழைத்து சென்றனர். அங்கு சண்முகராஜேஸ்வரனிடம் அவர்கள் பணம் கேட்டு துன்புறுத்தியதோடு, தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் சண்முகராஜேஸ்வரன் அங்கு இருந்து தப்பி வந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி போலீஸ் உதவி கமிஷனர் அசோகன், இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து சண்முகராஜேஸ்வரனை தாக்கியதாக லட்சுமணன், ஆனந்தன், கிருஷ்ணகுமார், மஞ்சுநாதன் ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறியபோது “அரசு வேலை வாங்கி தருவதாக கூறி லட்சுமணன் உட்பட பலரிடம் சண்முகராஜேஸ்வரன் பல லட்ச ரூபாய் வரை மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக அம்மாபேட்டை, அன்னதானப்பட்டி உள்ளிட்ட காவல் நிலையங்களில் சண்முகராஜேஸ்வரன் மீது பெரும்பாலானவர்கள் மோசடி புகார் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் சண்முகராஜேஸ்வரனை கடத்தி சென்று தாக்கி பணம் கேட்டு லட்சுமணன் உட்பட 4 பேரும் மிரட்டியது எங்களுக்கு தெரியவந்தது. மேலும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பே முறைகேடு புகார் தொடர்பாக சண்முகராஜேஸ்வரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்” என்று அவர்கள் தெரிவித்தனர். இதனிடையில் மோசடி புகார் தொடர்பாக சண்முகராஜேஸ்வரனிடம் காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |