14417 என்ற இலவச எண்ணிற்கு வரும் பள்ளிகளில் நடைபெறும் பாலியல் சீண்டல்கள் குறித்த புகார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மாணவர்களின் நலன் மற்றும் ஆலோசனை குறித்த விவரங்களை பெறுவதற்காக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கல்வி வழிகாட்டி உதவி மையம் தொடங்கப்பட்டது. மேலும் இந்த மையத்தால் 14417 என்ற இலவச எண் வழங்கப்பட்டு இதனை தொடர்பு கொண்டு 24 மணி நேரமும் மாணவர்கள் தங்கள் புகார்கள் மற்றும் கட்டண உயர்வு குறித்த புகார்களை தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை மாணவி பாலியல் தொந்தரவு காரணமாக தற்கொலை செய்துகொண்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் 14417 என்ற எண்ணிற்கு பள்ளிகளில் நடைபெறும் பாலியல் சீண்டல்கள் குறித்த புகார்களை தெரிவிக்கலாம் என கூறியிருந்தார். இதனை தொடர்ந்து தற்போது இந்த மையத்திற்கு வரும் பாலியல் வன்முறைகள் குறித்த புகார்கள் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. இந்த புகார்களை எவ்வாறு கையாள்வது மற்றும் மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்குவது என தெரியாமல் இந்த மையம் தற்போது திணறி வருகிறது. அமைச்சர் அவர்களின் அறிவிப்புகக்கு முன்பு இந்த மையத்திற்கு சராசரியாக 150 முதல் 200 வரை வரும் அவை அனைத்தும் கல்வி மற்றும் பொதுத்தேர்வு குறித்த புகார்களாக இருந்து வந்தன.
ஆனால் தற்போது 500 முதல் 550 புகார்கள் வரை நாள் ஒன்றுக்கு வருகின்றன. இவை அனைத்தும் பாலியல் வன்முறைகள் குறித்த புகார்கள் ஆகவே இருந்து வருகின்றன. வழக்கமாக இந்த மையத்திற்கு வரும் அழைப்புகளில் மாணவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு அதிகாரிகள் ஆலோசனை வழங்கி வந்தனர். ஆனால் தற்போது பாலியல் குறித்த புகார்களை எவ்வாறு கையாள்வது என தெரியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில் சில மாணவிகள் அளிக்கும் புகார்கள் மிக மோசமானவை எனவும் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருப்பது ஆகவும் அவர் கூறினார்.