வழிகாட்டுதல் குழுவை விரிவுபடுத்த வேண்டும் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார் .
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதுமட்டுமில்லாமல் அதிமுக அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் மறைந்த நிலையில் புதியதாக அதிமுகவிற்கு அவை தலைவர் தேர்ந்தெடுக்கும் முடிவுகளும் இதில் எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் பேசிய ஓ. பன்னீர்செல்வம் அதிமுக வழிகாட்டுதல் குழுவை மறுசீரமைக்க வேண்டும் என்றும், 11 பேர் கொண்ட குழுவின் எண்ணிக்கையை 18 ஆக அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும் வழிகாட்டுதல் குழுவுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்க வேண்டும் என்று அந்த கூட்டத்தில் ஓபிஎஸ் தரப்பு சார்பில் கோரிக்கை வைத்துள்ளார்.