Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மறைமுக தேர்தலை எதிர்த்து மனு தாக்கல்..!!

உள்ளாட்சித் தேர்தலில் மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படுவதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மறைமுக தேர்தல் முறையை ரத்து செய்யக்கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஸ்வி என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ”தமிழ்நாட்டிலுள்ள 15 மாநகராட்சிகளுக்கான மேயர்கள், 276 நகராட்சிகள், 561 பேரூராட்சிகள் ஆகியவைகளுக்கான தலைவர்கள் நேரடி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். இப்போது இப்பதவிகளுக்கு மறைமுக தேர்தல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மறைமுக தேர்தல் என்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. அரசு சுயலாப நோக்கத்துடன் மறைமுக தேர்தலை அமல்படுத்தியுள்ளது.

கவுன்சிலர்கள் சேர்ந்து தேர்வு செய்யும் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களுக்கும் மக்களுக்கும் நேரடித் தொடர்பு இருக்காது . அவர்களால் மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்காது. கடந்த திமுக ஆட்சியில் இப்பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்பட்டது. அடுத்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு மறைமுக தேர்தல் முறை பல்வேறு முறைகேடுகளுக்கு வாய்ப்பளிக்கும் என்று கூறி நேரடித் தேர்தல் முறையை மீண்டும் அமல்படுத்தியது.

ஆனால் தற்போது உள்ள எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு நேரடி தேர்தல் முறையை ரத்து செய்து மறைமுக தேர்தல் முறையைக் கொண்டு வந்துள்ளது. மேயர் ,நகராட்சி , பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள அவசர சட்டத்தை செல்லாது என்று அறிவித்து தடை விதிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |