ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீட்டை அரசுடமையாக்கப் பிறப்பிக்கப்பட்ட சட்டம் செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வாழ்ந்த போயஸ் தோட்டம் வேதா நிலையம் வீட்டை நினைவில்லமாக அறிவிக்கும் வகையில் அரசுடைமையாக்கி கடந்த அதிமுக ஆட்சி சட்டம் இயற்றியது. இதனை எதிர்த்து ஜெ. தீபா மற்றும் ஜெ. தீபக் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதி என். சேஷன் ஷாய் முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையில் போயஸ் தோட்டம் வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டது என்று அறிவிக்கப்பட்ட சட்டம் செல்லாது என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும் ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தீபக் மற்றும் தீபாவிடம் இன்னும் மூன்று வாரங்களில் வேதா நிலையம் வீட்டை சென்னை மாவட்ட ஆட்சியர் ஒப்படைக்க வேண்டும் எனவும் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் வேதா நிலையம் மற்றும் மெரினாவில் உள்ள பீனிக்ஸ் என்று இரண்டு நினைவிடங்கள் எதற்கு? என்று கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், கீழமை நீதிமன்றத்தில் உள்ள வருமான தொகையை வருமான வரி நிலுவை போக மீதியை தீபா மற்றும் தீபக்கிடம் கொடுக்க வேண்டும் எனவும் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.