தரமற்ற ரேஷன் அரிசி வழங்கப்படுவதை கண்டித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் 170-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் அமைந்துள்ளது. இந்த ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கும் அரிசி துர்நாற்றம் வீசுவதோடு, தரமற்றதாக இருக்கிறது. இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்களிடம் புகார் தெரிவித்தும், தொடர்ந்து தரமற்ற அரிசியே பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் மேலூர்-அழகர்கோவில் சாலையில் இருக்கும் கிடாரிபட்டி ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்கியதை கண்டித்து பெண்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் ரேஷன் அரிசியை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பிறகு பெண்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.