ஓட்டுநரை தாக்கியதோடு, அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று திருப்பூர் நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தை ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முத்து கிருஷ்ணன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்த பேருந்து காளவாசல் வழியாக திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் பேருந்தை முந்தி செல்ல முயன்றுள்ளது. ஆனால் சாலை குறுகியதாக இருந்ததால் பேருந்து ஓட்டுனரால் காருக்கு வழிவிட முடியவில்லை. இதனால் கோபம் அடைந்த கார் ஓட்டுனர் முந்தி சென்று பேருந்தை வழிமறித்து முத்துக்கிருஷ்ணனுடன் தகராறு செய்துள்ளார். மேலும் கார் ஓட்டுனர் இரும்பு கம்பியால் முத்து கிருஷ்ணனை சரமாரியாக தாக்கியதோடு, பேருந்தின் கண்ணாடியை உடைத்துள்ளார்.
இதனை பார்த்த அரசு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் அங்கு விரைந்து சென்று கார் டிரைவரை மடக்கி பிடித்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார் டிரைவரை பிடித்து விசாரித்த போது அவர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சுரேசை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.