நாட்டுகோழி பண்ணையின் மூலம் மக்களிடம் பணம் மோசடி செய்த நபர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள நம்பியூரில் கார்த்திகா மற்றும் பிரபு ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர். இவர்கள் அதே பகுதியில் கடந்த 2011-ஆம் ஆண்டு ஹெல்த்தி பவுல்ட்ரி என்ற பெயரில் நாட்டுக்கோழி பண்ணை அமைத்துள்ளனர். அதன் முதல் திட்டமாக ரூபாய் 1 லட்சம் முதலீடு செய்தால் செட் அமைத்து கொடுப்பதோடு, 500 நாட்டுக்கோழி குஞ்சுகள் மற்றும் அதற்கான தீவனங்களும், மருந்துகளும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். மேலும் மாதம்தோறும் அதற்கான பராமரிப்பு தொகையாக ரூபாய் 8,500-ம் ஆண்டு ஊக்கத் தொகையாக ரூபாய் 8,500-ம் வழங்கப்படும் என்று அறிவித்தனர்.
இரண்டாவது திட்டமாக ரூபாய் 1 லட்சம் முதலீடு செய்தால் செட் அமைத்து கொடுப்பதோடு 300 நாட்டுக்கோழி குஞ்சுகளும், அதற்கான தீவனங்களும், மருந்துகளும் வழங்கப்படும் என்று அறிவித்தனர். மேலும் பராமரிப்பு தொகையாக மாதம் ரூபாய் 8,500-ம் ஆண்டு ஊக்கத் தொகையாக ரூபாய் 12,000-ம் வழங்கப்படும் என அறிவித்தனர். இதனை நம்பி ஏராளமான பொதுமக்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்தனர். ஆனால் அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பணம் வழங்கப்படவில்லை. மேலும் முதலீட்டு தொகையும் திரும்பக் கிடைக்கவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த முதலீட்டாளர்கள் கடந்த 2012-ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டத்திலுள்ள பொருளாதார குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதில் அவர்கள் ரூபாய் 1 கோடியே 55 லட்சத்து 50 ஆயிரத்தை 99 பேரிடமிருந்து ஏமாற்றியது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக ராஜேந்திரன், ஜெய சாமுண்டீஸ்வரி, ராமசாமி, சதீஷ், முருகன், மணிகண்டன், பிரபு மற்றும் கார்த்திக் ஆகிய 8 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கு விசாரணை கோவையிலுள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் இதனை விசாரித்த நீதிபதி, 99 முதலீட்டாளர்களிடமிருந்து ரூபாய் 1 1/2 கோடியை மோசடி செய்த 2 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 1,65,60,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற 6 நபர்கள் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அவர்களை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.