டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட உள்ள 26 மசோதாக்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நவம்பர் 30-ம் தேதியுடன் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த பிரதமர் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் (PMGKAY), மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய அமைச்சர் அனுராஜ் தாகூர், “ஏழை, எளிய மக்கள் ரேஷனில் 5 கிலோ உணவு தானியங்களை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்தால் சுமார் 80 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இந்த திட்டத்திற்காக மேலும் 53,344 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ய உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.