விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை-பட்டுக்கோட்டை பிரதான சாலையில் மேலஉளூர் பேருந்து நிறுத்தம் அருகே விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டம் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்துள்ள நெல்லை அதன் நிலையத்தில் கொள்முதல் செய்யாததை கண்டித்து நடைபெற்றது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இந்நிலையில் விவசாயிகள் கூறியதாவது “கடந்த 20 தினங்களாக நெல்லை கொள்முதல் செய்யவில்லை .
இதனால் விற்பனைக்காக சாலை ஓரங்களில் பல தினங்களாக குவித்து வைக்கப்பட்டுள்ள நெல் மழையில் நனைந்து சேதமடைந்து வருகிறது” என்று அவர்கள் காவல்துறையினரிடம் முறையிட்டனர். இதனைதொடர்ந்து நெல்லை விரைவாக கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவித்தனர். இதன் காரணமாக சமாதானம் அடைந்த விவசாயிகள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக சுமார் 1 மணி நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.