தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “தமிழ் நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா? அல்லது சட்ட விரோத ஆட்சி நடைபெறுகிறதா? என்று அளவுக்கு நேற்று முன்தினம் காவல்துறை ஆய்வாளர், நேற்று மோட்டார் வாகன ஆய்வாளர் என அரசு அதிகாரிகள் உயிரிழப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சி அளிக்கும் நிகழ்வாக உள்ளது. நேற்று போக்குவரத்து வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்த கனகராஜ் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு அருகிலுள்ள பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்த முற்பட்டுள்ளார்.
அப்போது அந்த வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இந்த சம்பவத்தில் கனகராஜ் உயிரிழந்தார் என்பதை கேட்டு நான் மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக முதல்வர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி கனகராஜ் உயிரிழந்தார் என்று கூறி 50 லட்சம் ரூபாய் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கியுள்ளார். தமிழக முதல்வர் அவர்கள் அடையாளம் தெரியாத வாகனம் என்று குறிப்பிடுவதை வைத்து பார்க்கும்போது மோதிய வாகனம் நிற்காமல் சென்றதை வைத்து பார்க்கும்போது இது விபத்தாக இருக்காது என்கின்ற சந்தேகம் எழுகின்றது.
மோட்டார் வாகன ஆய்வாளர்கள் இடம் இருந்து தப்பிப்பதற்காக தான் வாகனம் நிற்காமல் சென்றதா? அல்லது அவர் மீது வேண்டுமென்றே மோதி நிற்காமல் சென்றதா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தவேண்டும். மேலும் முதல்வர் ஸ்டாலின் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு மிக காரணியாக விளங்கும் சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.